Tuesday, 10 September 2013

தென்னை வரமா சாபமா?


 
தென்னை உருவாக்கும் சுற்றுச் சூழல் சீரழிவு..

தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியை காணும் பொழுதில் மனதில் இதமும், அது தரும் மென் தென்றலும்  வந்து போனாலும் அதன் மறு பக்கம் தீமையை விளைவிக்கக் கூடியது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

மற்ற விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் நிரந்தர வருமானம் வேண்டி விவசாயிகள் பலரும் தென்னை விவசாயத்துக்கு  மாறி விட்டார்கள். ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என்று குறைந்த ளவில் விவசாயம் செய்பவர்கள் கூட இன்றைய நிலையில்  தென்னையை நாடிச் செல்வது தவிர்க்க முடியாமல் போய் விட்டது.
    
குறிப்பாக பொள்ளாச்சி உடுமலைப் பகுதிகளில் தென்னை தான் முதன்மைப் பயிர் ஆகியதால் முன்பு காங்கேயம் வரை வந்த தென்மேற்குப் பருவ மழைச் சாரல் இப்பொழுதெல்லாம் பொள்ளாச்சியைத் தாண்டுவதில்லை.

நீர் அதிகம் தேவைப்படும் தென்னையை கிணறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை மட்டும் நம்பி பயிரிட்டுவிட்டு பின்னர் மழை இல்லாத காலங்களில்  ஆயிரம் அடி இரண்டாயிரம் அடி என ஆழ்குழாய்களை அமைத்து நிலத்தடி நீரைச் சுரண்டி வருவதால் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. இதனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது 
சமீபத்திய ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வு முடிவுகளின் படி 
1.தென்னை மரங்களில் கிளைகள் இல்லாததால்  பறவைகள் கூடு கட்ட முடிவதில்லை  இதனால் பறவைகள் வரத்து  குறைகிறது 
2. அதிகம் பழங்களை மற்றும் தானியங்களை உண்ணும் பறவைகளுக்கு  உணவும் கிடைக்காததால் சத்து மிகுந்த பறவைகளின் எச்சம் ஐந்து முதல் பனிரண்டு மடங்கு அளவில் மண்ணில் விழுவது தடுக்கப்படுகின்றது
3. இதனால் தென்னை மரங்களுக்கு அருகில் இருக்கும் மற்ற பயிர்கள், தாவரங்கள் மற்றும் மரங்களுக்கு சரியான அளவில் நுண்ணூட்ட சத்துக்கள்  கிடைப்பதில்லை. அவற்றின் வளர்ச்சி தடைபட்டு அதானால் அப்பகுதிகளில் மழை அளவும் குறைந்து சுற்றுச் சூழலில் பெரும் சீரழிவை உண்டாக்குகிறது.

தென்னை குறைப்போம்.. மண்ணைக் காப்போம் 
 

Tuesday, 20 August 2013

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது --பனை அழிப்பு

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது --பனை அழிப்பு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.


Sunday, 30 June 2013

திருப்பூரின் தண்ணீர் விநியோகக் கதையைக் கேளுங்கள்

தீவட்டிக் கொள்ளை’ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா? 

நன்றி,நன்றி: ஜூனியர் விகடன்




திருப்பூரின் தண்ணீர் விநியோகக் கதையைக் கேளுங்கள். கேட்டால் நெஞ்சம் கொதிக்கும்.
 சாயப் பட்டறைகளும் ஆயத்த ஆடை நிறுவனங்களும் நிரம்பிய திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு, பல கோடி லிட்டர் தண்ணீர் தேவை. அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. 'திருப்பூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம்’ என்பது அதற்குப் பெயர். 1,023 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 'பெக்டெல்’ (பார்க்க பெட்டிச் செய்தி) என்ற பன்னாட்டு நிறுவனம், பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும். மஹிந்திரா-மஹிந்திரா என்ற இந்திய நிறுவனமும், யுனைடெட் யுட்டிலிட்டீஸ் என்ற ஐரோப்பிய நிறுவனமும் பவானியில் 25 குடிநீர் தேக்கங்களைக் கட்டும். 'புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் இந்தத் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேலைகள் நடந்தன. எல்-டி நிறுவனம் இதன் கட்டுமான வேலைகளைச் செய்ததால், இதை 'எல்-டி. தண்ணீர்’ என்றே மக்கள் அழைத்தனர். 2006-ம் ஆண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.
நாள் ஒன்றுக்கு பவானியில் இருந்து 18.5 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இதில் பெரும் பகுதி திருப்பூர் சாயப் பட்டறைகளுக்குப் போக... நெல்லுக்குப் பாய்ந்தது கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்ததுபோல சுமார் 25 கிராமங்களும் திருப்பூரின் ஒரு பகுதியும் இதன் மூலம் குடிநீர் வசதி அடைந்தன. 1,000 லிட்டர் தண்ணீர் கிராமப்புற மக்களுக்கு 3 ரூபாய்; நகர்ப்புற மக்களுக்கு 4.50 ரூபாய்; தொழில் நிறுவனங்களுக்கு 55 ரூபாய் என்ற அளவில் விநியோகம் செய்யப்பட்டது. ''தண்ணீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது மிகப் பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும்'' என்று அப்போதே பலரும் எச்சரித்தனர். இருந்தபோதிலும், ''இது இந்தியாவிலேயே ஒரு முன்னோடித் திட்டம்'' என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அதன் அசல் முகம், அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே வெளியே வந்தது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதார நெருக்கடி காரணமாக, திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் அவர்கள் வாங்கிய தண்ணீரின் அளவும் குறைந்தது. 2011-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருப்பூரின் பெரும்பாலான சாயப் பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. பவானி தண்ணீரை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் திவாலாகும் நிலைமைக்குப் போனது. அந்த நிலையில்தான் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். காட்சிகள் மாறின.
நஷ்டத்தில் இயங்கிய சங்கத்தை மீட்பதற்கு, கடந்த 2012 மார்ச் மாதம் புதிய உத்தரவு ஒன்றை ஜெயலலிதா பிறப்பித்தார். 'புது திருப்பூர் நிறுவனத்தின் கடனுக்கான வட்டிகள் குறைக் கப்படும்; கடன் தொகையின் 15 சதவிகிதத்தை வங்கிகளே ஏற்றுக்கொள்ளும்’ என சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. அதன் உச்சமாக, 'புதியத் திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் விநியோகிக்கும் தண்ணீரை, நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் திருப்பூர் மாநகராட்சி வாங்கிக்கொள்ளும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. இந்த ஆண்டு மார்ச் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அவசியம் இல்லாமல் கூடுதல் தண்ணீரை வாங்குவது ஒரு பக்கம் இருக்க... 4.50 ரூபாயாக இருந்த விலையை 21 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது அரசின் உத்தரவு.
இந்த 21 ரூபாயில் 7.50 ரூபாயை மாநகராட்சி தர, மீதம் உள்ள 13.50 ரூபாயை தமிழக அரசு வழங்கும். யாரோ சிலர் நஷ்டம் அடையாமல் இருக்க, மக்கள் பணம் தாரை வார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல... நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் வாங்கிக்கொள்ள தமிழக அரசு உறுதி அளித்துள்ளதால், இனிவரும் காலங்களில் இந்தத் தண்ணீர் கொள்முதல் இன்னும் அதிகரிக்கும். அந்தச் சுமையை 'குடிநீர் வரி’யின் பெயரால் மக்களிடம்தான் வசூலித்தாக வேண்டும். ஏற்கெனவே சாயப் பட்டறைகளின் காரணமாக தங்கள் மண் வளத்தை இழந்து நோய்களை சுமந்து நிற்கும் மக்கள், இப்போது குடிநீர் வரியாக பெரும் தொகையைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதா இப்படிச் செய்கிறார். ஆனால், பாதிக்கப்படுவது மக்கள்தான்.
சாயப் பட்டறை உரிமையாளர்கள் தண்ணீர் வாங்குவதை நிறுத்திவிட்டனர் என்றால், என்ன செய்ய வேண்டும்? பவானியில் உறிஞ்சும் தண்ணீரை நிறுத்த வேண்டும். அல்லது, தேவைக்கேற்பக் குறைக்க வேண்டும். ஆனால் இவர்களோ, விலைமதிப்பு இல்லாத நிலத்தடி நீரை இடைவிடாமல் உறிஞ்சுவதுடன், அந்தச் சுமையை பொதுமக்களின் தலையில் சுமத்துகின்றனர். இயற்கை வளத்தை நாசமாக்கி, மக்கள் பணத்தைச் சூறையாடும் இந்த செயல் மன்னிக்க முடியாத கொடுங்குற்றம். இத்தனைக்கும் பிறகு, இப்போது திருப்பூரின் குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது குடிநீர் திட்டத்துக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பொறுப்பும், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. (திட்ட அறிக்கைத் தயார் செய்வதற்கான தொகை 1.60 கோடி ரூபாய்).
தண்ணீரைத் தனியார்மயமாக்குவதன் கோர முகம் இதுதான். லாப வெறி மட்டுமே அவர்களின் குறிக்கோள். இயற்கையை நாசமாக்குவது குறித்தோ, நீர்வளத்தை விஷமாக்குவது குறித்தோ, அவர்களுக்குக் கவலை இல்லை. டெல்லி மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக, 'சோனியா விஹார்’ என்ற திட்டம் தீட்டப்பட்டது. கங்கை நதியில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்து சுத்திகரித்து, மக்களுக்கு விநியோகிக்கிறது டெல்லி குடிநீர் வாரியம். நாள் ஒன்றுக்கு சுமார் 270 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் வாரியத்தால், மேற்கொண்டும் 63 கோடி லிட்டரை சுத்திகரிக்க முடியவில்லையாம். இதற்காக உலகத்தின் மிகப் பெரிய தண்ணீர் கம்பெனிகளில் ஒன்றான சூயஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஒன்டியோ டெக்ரிமெண்ட் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 200 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம், இலவச மின்சாரம், வரி கிடையாது என ஏகப்பட்ட சலுகைகள். அதுபோக, தண்ணீர் தேவை குறைந்தாலும்கூட, 63 கோடி லிட்டர் தண்ணீரை வாங்கியே ஆக வேண்டும். ஒருவேளை, கங்கையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், 63 கோடி லிட்டரை சுத்திகரிப்பதற்கு உண்டான கட்டணத்தைத் தந்துவிட வேண்டும். இது எல்லாவற்றையும் மீறி, ஒப்பந்தக் காலமான 10 ஆண்டுகளில் சூயஸ் நிறுவனம் லாபகரமாக இயங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். சுய சிந்தனை உள்ள யாராவது இந்த ஒப்பந்தத்தை ஏற்பார்களா? ஆனால், டெல்லி குடிநீர் வாரியம் ஏற்றுக்கொண்டது.
தண்ணீர் தனியார்மயத்தின் உச்சகட்ட கொடூ ரம்... 'ப்ரீபெய்டு தண்ணீர்’! உங்கள் செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்கிறீர்கள் அல்லவா? அதுபோல, தண்ணீருக்கும் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இது கற்பனை இல்லை. உலகின் பல நாடுகளில் இப்படித்தான் கொள்ளை அடிக்கிறார்கள்...

Saturday, 29 June 2013

இரு ஆண்டுகளுக்கு பிறகு, நொய்யல் ஆற்றில் புதுவெள்ளம்...!!



இரு ஆண்டுகளுக்கு பிறகு, நொய்யல் ஆற்றில் புதுவெள்ளம் சீறிப்பாய்ந்து வந்தது;இதையடுத்து, கோவையின் முக்கிய குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால், கோவை யின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதி கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், முதல் அணையான சித்திரைச்சாவடி நேற்று காலை நிரம்பியது. இதனால், அணையின் இடது ஓரத்திலுள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறியது. 

பேரூர் செட்டிபாளையம் கங்கநாராயணசமுத்திர குளம், சொட்டையாண்டிகுளம், பேரூர்பெரியகுளம், வேடபட்டி கோளராம்பதி குளம், புதுக்குளம், நரசாம்பதி, கிருஷ்ணாம்பதிகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், சுண்டக்காமுத்தூர் செங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதில், செம்மேடு கிராமத்திலுள்ள உக்குளம் நேற்று நிரம்பியது. 

உக்கடம் குளத்திற்கு "திடீர்' சிக்கல்
மழைகாலத்தில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை தேக்கும் வகையில், உக்கடம் பெரியகுளம் தன்னார்வ அமைப்புகள் இணைந்து தூர்வாரினர். ஆனால், பெரியகுளத்துக்கு தண்ணீர் வரும் நொய்யல் வாய்க்கால் பகுதியில் சிலர் சுயநலத்துடன் கட்டடகழிவு மற்றும் குப்பைகøள் கொட்டியதால், ஆண்டிபாளையம் வாய்க்கால் பகுதியில் தண்ணீர் குளத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு அடைப்பு ஏற்பட்டது.இதனால், உக்கடம் பெரியகுளத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இத்தகவல் தெரிந்ததம், பொதுப்பணித்துறையினர், ஜே.சி.பி., உதவியோடு வாய்க்கால் கீழே ஷட்டரில் அடைப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகளை அகற்றும் பணிகளை மீனவர்கள் உதவியுடன் அகற்றும் பணி மேற்கொண்டனர். மேலும், ஜே.சி.பி., உதவியுடன் புதைமண்ணில் சிக்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதியளவு தண்ணீர் உக்கடம் பெரியகுளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
தண்ணீர் செல்லும் வாய்க்காலில் இருந்த அடைப்புகள் பெருமளவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, மீதமுள்ள அடைப்புகள் எடுக்கப்பட்டு, குளத்துக்கு தடையின்றி தண்ணீர் சீராக செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும், என்றார்.

மழை நீரை சேமிக்க..!!


மழை நீரை சேமிக்க..

ஒவ்வொரு ஊரிலும், கிராமங்களிலும் மழை நீரை தேக்கி வைக்கும் விதத்தில், 
குளம், குட்டைகளை பராமரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் எராளமான 
இடங்களில் தடுப்பு அணைகள், குட்டைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை புதியதாக 
உருவாக்க வேண்டும். 

இதன் மூலம் மழை காலத்தில் நமக்கு கிடைக்கும் மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் சேமித்து வைத்து நிலத்தடி நீரை பெருக்கி கொள்ளவேண்டும்.

நிலத்தடி நீர் வளத்தை மாசுபடுத்தி கெடுக்கும், அல்லது சுரண்டும் எந்த 
தொழிலாக இருந்தாலும், அதனால் எத்தனை கோடிகள் வருமானம் வருவதாக இருந்தாலும் 
தடை செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தொழில்களுக்கு நிலத்தடி நீரை 
பாதுகாக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஏற்றுகொள்ள செய்யும் 
விதத்தில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மீறுவோருக்கு கடும் சிறை 
தண்டனைகள் கிடைக்கும் விதத்தில் சட்ட விதிகள் திருத்தபடவேண்டும்.

மனிதன் உயிர் வாழ நீரும், உணவும் மிக முக்கியம். பணம், கார், பங்களா, 
ஆடம்பரமான வாழ்க்கை வசதிகள், ஆறு வழி சாலைகள் இல்லாமல் கூட உயிர் வாழ்ந்து 
விடலாம். ஆனால் நிலத்தடி நீர் தீர்ந்து விட்டால், மாசுபட்டு கெட்டு 
விட்டால், விவசாயம் அழிந்து விட்டால், பசிக்கும் வயிற்றுக்கு கட்டு கட்டாக
ரூபாய் நோட்டுக்களை தீனியாக போட முடியாது. தாகம் எடுத்து வறண்டு கெஞ்சும் 
நாக்குக்கு பன்னாட்டு குளிர்பானங்களை கொடுத்து திருப்தி படுத்த முடியாது.

தொழில்வளம், பொருளாதார வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் அதற்காக இயற்க்கை 
வளங்களை அளித்துதான் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்றால் அந்த தொழில் 
வளர்ச்சியை வைத்து கொண்டு எதிர்காலத்தில் மனிதனுக்கு நீர், உணவு தர முடியாது. 

நீர்நிலைகள், குளம் குட்டைகளில் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்களை 
உருவாக்குவதை தடை செய்ய வேண்டும்.

Tuesday, 11 December 2012

நொய்யலை பாதுகாக்க என்ன செய்யலாம் ?

காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.
--உலகப் புகழ் பெற்ற சப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசாநோ புகொக்கா

நதிக்கரையில் தான் நாகரீகங்கள் தோன்றின, அவ்வாறு தோன்றிய நாகரிகம் உழவுத் தொழிலை முதலில் மேற்கொண்டு உழவின் திசைவழியில் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டு நவீனம் நோக்கி நகர்ந்தது  என்பது மானுடவியல், அவற்றில் ஒன்று தான் நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் இன்று  வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்து வாழ்வை இழந்து நிற்கிறது  .
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வழியாக கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கும் இடம் தான் நொய்யல் என்று அழைக்கப்படுகிறது. முன் ஒரு காலத்தில்  கொங்கு நாட்டின் வற்றாத ஜீவ நதியாகவும், விவசாயத்ததை செழிப்பாக்கிய இந்த நொய்யல் நதி இன்று இறந்த நதி என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிமா நதி என்று அழைக்கப்பட்ட புண்ணிய நதி, இன்று கழிவு நீர்  நதியாக மாறிவிட்டது.

 "இறந்து" கொண்டிருக்கும் நதியை காக்க என்ன செய்யலாம் என்பது நாம் எடுத்துக்கொண்ட கருதுகோள் ஆனாலும் செய்யக் கூடாத எல்லாவற்றையும் செய்தாகி விட்டபடியால் என்ன "செய்யக் கூடாது" என்பதை முன்னிறுத்தியே நமது பயணம் தொடங்குகிறது'' மக்கள், இயற்கையிடமிருந்து தங்களை எவ்வளவு விலக்கிக் கொள்கிறார்களோ... அந்த அளவுக்கு இயற்கையின் மையத்திலிருந்து விலகி விலகிச் செல்கிறார்கள். ஆனால், இயற்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் மீண்டும் அதிகமாகிறது. 
மனிதர்கள், தப்பான ஒன்றைச் செய்துவிட்டு, அதைச் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர். அதன் விளைவுகள் மொத்தமாகத் தாக்கும்போது தனது வலிமை அனைத்தையும் சேர்த்து, வரிந்து கட்டிக்கொண்டு சரி செய்ய முனைவர். அது தான் இன்று நொய்யல் பேரழிவுக்குப் (holocaust) பின்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்று நொய்யலை மீட்டெடுக்க பல யோசனைகள் முன்வைக்கப் படுகின்றன அவற்றில் முதன்மையானதும் அவசரமானதுமானவற்றை மட்டும் பார்ப்போம்.

துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். இப்பணியின் வெளியீடாக துவக்கம் முதல் நிறைவு வரை பட்டாம் பூச்சி விளைவைப் (butterfly effect)  போல தொடர் விளைவை உருவாக்கக் கூடியது. நொய்யலின்  நதி மூலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே தொடங்குவோம் 

மழை ஈர்ப்பு மையங்களை உருவாக்குதல் 

நொய்யலின் நீராதாரமாக இருக்கும் பல்லுயிர் மண்டலமாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடழிப்புச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி காடு வளர்ப்பு செயற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் இதன் மூலம் மழை ஈர்ப்பு மையங்கள் உருவாகி நொய்யலின் நீராதார பெருக்கத்துக்கு வழிவகை செய்யும் நடவடிக்கையாக அமையும் . 

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து இறங்கிய நொய்யல் முதலில் நகர "நாகரீகத்தோடு" கலக்கும் இடமாம் பேரூரில் இருந்து கோவை நகரம் வரை பல குளங்களை நிரப்புகிறது இந்தப் பகுதியில்  சாக்கடைக் கழிவுகள், பொதுக் கழிப்பிடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்... எனக் கொட்டி வைத்திருக்கிறார்கள். இதனால், குளங்களின்  தன்மை மாறி, மாசடைந்து விட்டது. மேலும் வீட்டுக் கழிவு நீர், ஆலைக் கழிவு நீர், சாயக் கழிவு நீர் என்று பல வகைக் கழிவு நீர்களும்  நேரிடையாக கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவை குழாய்கள் மூலம் ஒருங்கிணைக்கப் பட்டு பலகட்ட வடிக்கட்டல் மற்றும் தூய்மையாக்கல்(filtration and purification )  முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே வெளிய்ற்றப் பட வேண்டும். 

  1. குமாரசாமி குளம்
  2. செல்வம்பதி குளம் 
  3. கிருஷ்ணாம்பதி குளம் 
  4. நரசம்பதி குளம் 
  5. செட்டிபாளையம் குளம் 
  6. செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் 
  7. உக்கடம் வாலாங்குளம் 
  8. கோவை குளம் 
  9. சிங்காநல்லூர் குளம் 
  10. சூலூர் குளம் 
  11. சாமளாபுரம் குளம் 
  12. ஆண்டிபாளையம் குளம் 
  13. ஒரத்துப்பாளையம் அணை 
 மேற்கண்ட இக்குளங்களில் ஆகாயத்தாமரை மற்றும்  சட்டவிரோத குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு,  வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
வெட்டி வேர், அசோலா முறைகள் 

வெட்டி வேரானது  மிகச் சிறந்த நச்சு நீக்கியாகப் பயன்படுகிறது.வெட்டி வேர் நச்சுக்களை தன்னகத்தே இழுத்து செரிக்கும் தன்மையுடையதால் 
குளங்களில் இயற்கையான முறையில் சுத்திகரிப்புகளை மேற்கொள்ள  வெட்டி வேர் பயிரிடுவதன் மூலம் படிந்துள்ள நச்சின் அளவை  படிப்படியாக குறைத்து முற்றிலும் இல்லாது செய்யலாம்.

அசோலா முறை 

அசோலா, கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்புடையது. குளத்தில் போட்ட அசோலாவில் உள்ள 'ரைசோபா’ என்கிற செல், அடியில் சென்று கடினமான தரைப்பகுதியை இலகுவாக்கும் வேலையைச் செய்யும். அடியில் உள்ள நைட்ரேட்டை உடைத்து நைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் மாற்றும். இதில் அடியில் உள்ள நுண்ணியிரிகளுக்கு நைட்ரஜன் உரமாகும். இதனால், ஆக்சிஜனின் அடர்த்தி அதிகமாகி, தண்ணீரின் தன்மை மாறும். அதேபோல குளத்தில் உள்ள மற்ற கனிமங்களையும் தனது வேர்ப் பகுதியில் அசோலா உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால், குளம் மீண்டும் நன்னீர்க் குளமாக மாறும். இதற்கு இரண்டு முதல் மூன்று மாத காலம் பிடிக்கும் பின்னர் குளம் ஓரளவு நல்ல நிலையை அடையும் ஏற்கனவே திண்டுக்கல்லில் தமிழக வேளாண் பல்கலைக்கழ உதவியுடன் பரிச்சார்த்த முறையில் தொடங்கி உள்ளார்கள் வெளிநாடுகளில் இம்முறை பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது ஆனாலும் நாம் உடனடியாக இதைத் தொடங்க வேண்டிய நிலை உள்ளது
இந்த முறைகளைப் பயன்படுத்தி "மரண"  அணையாக  வீற்றிருக்கும் "ஓரத்துப் பாளையம்" அணையை உடனடியாக தூய்மைப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் 

சாய ஆலைத் தொழிலை முறைப்படுத்தல்.

நொய்யல் கரையோராம் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்ட சாய ஆலைகள் கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.இதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் .சாய ஆலைகளை ஒரே இடத்தில் செயல்பட வைக்க தொழிற்பேட்டைகளை அமைப்பதன் மூலம் முற்றிலும் முறைப்படுத்த வேண்டும்.சட்டவிரோதமாக சாயமிடுபவர்களின் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். திருட்டு விசிடி விற்பவர்களின் மேல் கடுமையான சட்டம் பாயும் போது, தொழில் வளர்ச்சி என்று  இயற்கையை சீரழித்து அடுத்த சந்ததியினரை ஒழித்துகட்டும் இவர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டம் பாய வேண்டும். 

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும்,ஆற்றில் கலப்பதை தடை செய்யவேண்டும். ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட ஆற்றில் கலக்காமல் குழாய்மூலம்அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் 

தனியார்களாலும் சாலைகள் அமைக்கிறோம், உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறோம் என்று அரசாங்கங்களாலும்  ஆற்றின் கரையெங்கும் நடக்கும் கொடூரமான ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்கு திருப்பூர் நகரத்தில் கடக்கும் ஆற்றின் கரைகளின் அளவே மிகப்பெரும் சான்றாக விளங்குகிறது துவக்கத்தில் 400 அடியாக இருக்கும் கரை வளர்மதிப் பகுதியை அடையும் பொது 250 அடியாகக் குறைந்துள்ளது பின்னர் மேலும் குறைந்து நல்லூர் பகுதியில் வெறும் சிற்றோடையாக குறுகியுள்ளது.இதைப் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தி எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல் காக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்,அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டியவை.

ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். 

திறந்த வெளிச் சாக்கடைகள் எனும் தீராத தொல்லை  

சாயக் கழிவுகளுக்கு சற்றேறக் குறைய தீமையைத் தரும் நொய்யல் கடந்து வரும் வழியெங்கும் இருக்கும் சிற்றூர்கள், பேரூர்கள்,சிறு, பெரு நகரங்களின்வசிப்பிட கழிவு நீர் (domestic exit) கழிவுகள் நேரிடையாக கலப்பதைத் தடுக்க  திறந்த வெளி சாக்கடைகளை முற்றிலுமாக பாதாள சாக்கடைகளாக மாற்றி அமைப்பதன் மூலம் குப்பைகள் கழிவுகளோடு கலப்பதையும் தடுத்து , அவற்றின் கழிவு நீரை ஒருங்கிணைத்து தூய்மைப் படுத்தி பின்னர் வெளிய்ற்றுமாறு செய்யப்பட வேண்டும். இதனால் நொய்யல் பாதுகாக்கப் படுவதோடு டெங்கு, காலரா போன்ற நோய்களை உருவாக்கும் மூலத்தை அடியோடு தகர்க்க முடியும் குறிப்பாக இன்று தமிழகம் முழுவதிற்குமே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் டெங்கு பேராபத்தை வரும் முன் தவிர்க்க முடியும்

நொய்யல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மரமாத்து முறை 
நொய்யல் பயணிக்கும் வழியெங்கும் மேற்கண்ட உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளோடு, இதன் தொடர்சியைப் பேண  பொது மக்கள், அரசு, தன்னார்வ அமைப்புகள் ஆகியோரைக்கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, உறுதியான பொறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும் 

நொய்யலின் குளங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் நீர் நிலைகள் மீதான மக்கள் கட்டுப்பாட்டை அன்றைய ஆங்கிலேய அரசு வலுக்கட்டாயமாகப் பறித்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதே, இது நொய்யல் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் காணக் கூடியதாக இருக்கிறது 
எனவே  குளங்களைப் பாதுகாக்க உலகமே வியந்து போற்றிய பண்டைத் தமிழரின் குடிமராமத்து முறையை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க  வேண்டும்.அதாவது குளங்களை அந்தந்த குளங்கள்  உள்ள ஊரில் உள்ள குழு ஒன்றே பரமாரிக்கும் உரிமையைக் கொண்டு வரவேண்டும் அரசின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு தென் மாவட்டங்களில் இதே லட்சியத்துடனும் தீவிரமாக செயல்படும் திரு வாசிமலை அவர்களை தலைவராகக்  கொண்ட வயலகம் போன்ற அமைப்பின் ஆலோசனைகளையும் சேவைகளையும் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

தனிமனித விழிப்புணர்வு மற்றும் சுற்றுச் சூழல் கல்வி குறித்த தேவை..
மேற்கூறிய எல்லா முறைகளையும் சேர்த்தும் அதற்கும் மேலாகவும் காலத்தின் தேவையாக இருப்பது தனிமனிதனின் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறை. இதை எந்த அரசாங்கத்தாலும் சட்டத்தாலும் உடனாடியாக கொண்டுவரமுடியாது. இதற்குத் தீர்வு பள்ளிகளில் இருக்கிறது.பள்ளிகளில்  சுற்றுச் சூழலை ஒரு கட்டாயப் பாடமாக ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி ஆண்டு வரை  வைக்கவேண்டும் அதன் வழியே பல விழிப்புணர்வு செயல் முறைத் தேர்வுகளை ஒழுங்கமைத்து சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கவும், தொடர்ந்து சூழலைப் பாதுகாக்கவும் பேணவும்  முடியும்,  இது ஒரு இலட்சிய நோக்கத்திற்கான  இலக்கு நோக்கிய பயணம்,துவக்கத்தில் கசக்கும் இறுதியில் இனிக்கும் பெரு நெல்லிக்கனியைப் போன்றே வலி இருப்பினும் முடிவில் வளம் பெருக்கும், வாழ்வு சிறக்கும். எனவே  நாம் அனைவரும் இணைந்தே செயல்படுவோம், இனி வரும் தலைமுறைகளுக்கு இனிய உலகை விட்டுச் செல்வோம் .

நன்றி,
--நொய்யல்  பாதுகாப்பு அமைப்பு, திருப்பூர்.
Save Noyyal River.
facebook.com/noyyal
facebook.com/Save.Noyyal.River

Sunday, 1 April 2012

நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?


நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?





  மீன்கள் துள்ளி விளையாடிட... ஜீவனுள்ள நதியாக விளங்கிய நொய்யல் நதி இன்று சாயக்கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும், நகரத்தின் இன்ன பிற கழிவுகளும், குப்பைக் கூளங்களும் நிரம்பி கழிவுநீர்க் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு சுமார் 180 கி.மீ., நீண்டு கிடக்கிறது. 32 பெரிய ஏரிகள், நூற்றுக்கணக்கான குளங்களையும் நிரப்பும் இதன் நீர் பிடிப்புப் பகுதிகளின் பரப்பு சுமார் 3.5 லட்சம் ஹெக்டேர். இப்பகுதிகளில் 1970 முதல் 1994 வரை ஆண்டுக்கு சராசரியாக 607.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வருடத்தில் சராசரியாக 39.4 நாட்கள் மழை பெய்யும் நொய்யலில் வருடம் ஒரு முறையாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 1974 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் திருப்பூர் நகரின் மையப்பகுதியே நீரில் மிதந்தது, தற்போதைய மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஈஸ்வரன் கோயில் பாலத்தை சேதப்படுத்திய அந்த வெள்ளம் யுனிவர்சல் தியேட்டரையும் தாண்டி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. நொய்யலாற்றில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகள்தான் அந்த வெள்ளப் பெருக்கின் சீற்றத்தை மட்டுப்படுத்தி பேரழிவு ஏற்படாமல் செய்தன.

அமிலத்தன்மை:
வளமான நதியாக ஓடிக் கொண்டிருந்த நொய்யலாறு, கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக பாழ்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, திருப்பூரில் ஆண்டுக்கு 1500 டன் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. கந்தக அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், சலவை திரவம், சோடா உப்பு, சோடியம் பெர்ஆக்சைடு மற்றும் வண்ண வேதிப்பொருட்கள் நொய்யலின் அமிலத்தன்மையை அதிகரித்துள்ளன. அத்துடன், மாநகரின் கழிவு நீர், தொழிற்சலைகளின் வேறு பல கழிவுகளும் கலந்து மாசு அளவு அதிகரித்துள்ளது. இதனால் நீரிலுள்ள ஆக்சிஜனின் அளவு 1900 ஆண்டுவாக்கில் இருந்ததைவிட குறைந்து தற்போது ஆறு தன் ஜீவனிழந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளில் திருப்பூரின் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.
நொய்யல் நதிக்கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கிய விலை மதிப்பற்ற இயற்கைச் செல்வத்தை இழந்து தவிக்கிறார்கள். தற்போது அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நொய்யலைச் சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு மீட்க வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நொய்யல் சீரமைப்பு:

நொய்யல் ஆற்றைச் சீரமைத்து அழகுபடுத்துவோம் என்ற அறிவிப்புடன் தற்போது ”நொய்யல் சீரமைப்பு குழுவினர்” சில பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள், திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள ஆற்றின் ஒரு பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்துவதுடன், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் ஆற்றோரச் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்யத் துவங்கியுள்ளனர். மாநகரின் இன்றைய அவசரத் தேவைகளைப் பார்க்கும்போது அவர்கள் பணி வரவேற்புக்குரியதே. ஆனால் நடைமுறையைப் பார்க்கும்போது சில அவசியமான கேள்விகளை எழுகின்றன.

எச்சரிக்கை தேவை:
நதிகள், பேரழகை மட்டுமல்ல, பேரழிவை உண்டாக்கும் சக்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளவை. நதி சீரமைப்புப் பணியாற்ற துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். ஆனால், நொய்யல் சீரமைப்புக் குழுவினர் இந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறார்களா?.

இதுகுறித்து சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்களுடன், நொய்யல் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு விபரங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நொய்யல் சீரமைப்புக் குழுவினர் மேற்கண்ட தன்மையில் ஆய்வுகள் செய்து வேலைகளைத் துவக்கியதாகத் தெரியவில்லை.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள்:
நொய்யலாற்றின் எல்லைகளை வரையறுக்கப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பொதுப்பணித் துறையினர் சர்வே பணியைத் துவங்கியுள்ளனர். திருப்பூரின் உட்பகுதியில் காசிபாளையம், பூலவாடி சுகுமார் நகர், அணைக்காடு, மணியகாரம்பாளையம், மின்மயானம் ஆகிய பகுதிகளில் நொய்யலாறு சுமார் 400 அடி அகலம் பரந்துள்ளது. இதில், மணியகாரம்பாளையம் முதல் சுகுமார் நகர் வரை தெற்கு கரையோரத்திலும், சில பகுதிகளில் ஆற்றிற்குள்ளும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் வடக்கு கரையில் அணைக்காடு, கருமாரம்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. காசிபாளையம் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சில தனியார் கட்டிடங்கள் ஆற்றின் கரையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. வளர்மதி பாலம் உள்ள பகுதியில் மிகக் குறுகலாக சுமார் 250 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. மேலும், மணியகாரம்பாளையம் மின்நிலையம் எதிர்புறம் ஆற்றில், நல்லுர் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறன. இந்த இடத்தில் ஆறு மிகவும் குறுகி ஓடை போல் காட்சிதருகிறது.
குறிப்பாக கஜலட்சுமி தியேட்டர் இருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றங்கரை தியேட்டர் வாசலை ஒட்டினார்போல் இருந்தது. அதற்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக மாறி இருக்கிறது. மீண்டும் அங்கே சாலை அமைக்க மேற்கொள்ளும் முயற்சி நொய்யல் ஆற்றை மென்மேலும் குறுக்குவதாக இருக்கிறது.

ஆற்றுக்கு உள்ளே சாலை?
ஆனால், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அப்படியே விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியும் பகுதிகளில் மட்டும் வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபடி மேலே சென்று அணைக்காடு பகுதியை ஒட்டிய கரையில் ஆற்றிறுக்கு உள்ளேயே மாநகராட்சி திட்ட சாலை அமைத்தது. அதே பகுதியில் ஆற்றங்கரையில் சமுதாய நலக்கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு அப்பணிகளை நிறுத்தியுள்ளன. மேலும், ஆற்றின் பரப்பில் உள்ள இயற்கையான பாறைகள் ”அழகை மேம்படுத்துதல்” எனும் பெயரில் கனரக இயந்திரங்கள் மூலம் உடைத்து இடம் மாற்றப்படுகின்றன. மேலும், ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த செயல்பாடுகள், திருப்பூரின் மையத்தில் கண்ணுக்கு தெரியும் பகுதிகளில் மட்டும் நொய்யல் ஆற்றை அழகுபடுத்துவதாக உள்ளது. இப்போது நடைபெறும் பணிகள் நொய்யல் நதியை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வரும் அடிப்படை மாற்றத்துக்கு உதவாது.

பேரழிவு அபாயம்:

ஆறுகள் நீரினால் மட்டும் ஆனதல்ல, பாறைகளும், மணலும் ஆற்றின் போக்கை தீர்மானிப்பதில் முதல் பங்கு வகிக்கின்றனர். அனைத்து ஆறுகளுமே வளைந்து நெளிந்து தான் பயணிக்கின்றன, அதுதான் நீரின் போக்கு. ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாத நிலையில், இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை.

அறிவியல் ஆய்வு அவசியம்:
கடந்த 50 ஆண்டுகளில் நொய்யல் நதியின் போக்கு குறித்து அறிவியல் அடிப்படையிலான ஆய்வு செய்யவேண்டும். புவி வெப்பமயமாக்கல் குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. பல நாடுகள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பருவ நிலையில் மாற்றம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புதிய நோய்கள் உருவாக்கம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளைத் தற்போது சந்தித்து வருகின்றது. எனவே நொய்யல் நதியைப் பாதுகாப்பது என்பதும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும்.

கரையோர மேம்பாலங்கள்:
போக்குவரத்தை சீரமைக்க நொய்யலின் கரைகளையொட்டி சாலைகள் அவசியமே. ஆனால், இப்போது போல ஆற்றை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பது மிக மோசமான விளைவுகளையே தரும். ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த விசயத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியின் கருத்துக்கள் பொருத்தமானவை. "ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்."