தீவட்டிக் கொள்ளை’ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?
நன்றி,நன்றி: ஜூனியர் விகடன்
திருப்பூரின் தண்ணீர் விநியோகக் கதையைக் கேளுங்கள். கேட்டால் நெஞ்சம் கொதிக்கும்.
சாயப் பட்டறைகளும் ஆயத்த ஆடை நிறுவனங்களும் நிரம்பிய திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு, பல கோடி லிட்டர் தண்ணீர் தேவை. அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. 'திருப்பூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம்’ என்பது அதற்குப் பெயர். 1,023 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 'பெக்டெல்’ (பார்க்க பெட்டிச் செய்தி) என்ற பன்னாட்டு நிறுவனம், பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும். மஹிந்திரா-மஹிந்திரா என்ற இந்திய நிறுவனமும், யுனைடெட் யுட்டிலிட்டீஸ் என்ற ஐரோப்பிய நிறுவனமும் பவானியில் 25 குடிநீர் தேக்கங்களைக் கட்டும். 'புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் இந்தத் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேலைகள் நடந்தன. எல்-டி நிறுவனம் இதன் கட்டுமான வேலைகளைச் செய்ததால், இதை 'எல்-டி. தண்ணீர்’ என்றே மக்கள் அழைத்தனர். 2006-ம் ஆண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.
நாள் ஒன்றுக்கு பவானியில் இருந்து 18.5 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இதில் பெரும் பகுதி திருப்பூர் சாயப் பட்டறைகளுக்குப் போக... நெல்லுக்குப் பாய்ந்தது கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்ததுபோல சுமார் 25 கிராமங்களும் திருப்பூரின் ஒரு பகுதியும் இதன் மூலம் குடிநீர் வசதி அடைந்தன. 1,000 லிட்டர் தண்ணீர் கிராமப்புற மக்களுக்கு 3 ரூபாய்; நகர்ப்புற மக்களுக்கு 4.50 ரூபாய்; தொழில் நிறுவனங்களுக்கு 55 ரூபாய் என்ற அளவில் விநியோகம் செய்யப்பட்டது. ''தண்ணீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது மிகப் பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும்'' என்று அப்போதே பலரும் எச்சரித்தனர். இருந்தபோதிலும், ''இது இந்தியாவிலேயே ஒரு முன்னோடித் திட்டம்'' என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அதன் அசல் முகம், அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே வெளியே வந்தது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதார நெருக்கடி காரணமாக, திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் அவர்கள் வாங்கிய தண்ணீரின் அளவும் குறைந்தது. 2011-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருப்பூரின் பெரும்பாலான சாயப் பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. பவானி தண்ணீரை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் திவாலாகும் நிலைமைக்குப் போனது. அந்த நிலையில்தான் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். காட்சிகள் மாறின.
நஷ்டத்தில் இயங்கிய சங்கத்தை மீட்பதற்கு, கடந்த 2012 மார்ச் மாதம் புதிய உத்தரவு ஒன்றை ஜெயலலிதா பிறப்பித்தார். 'புது திருப்பூர் நிறுவனத்தின் கடனுக்கான வட்டிகள் குறைக் கப்படும்; கடன் தொகையின் 15 சதவிகிதத்தை வங்கிகளே ஏற்றுக்கொள்ளும்’ என சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. அதன் உச்சமாக, 'புதியத் திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் விநியோகிக்கும் தண்ணீரை, நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் திருப்பூர் மாநகராட்சி வாங்கிக்கொள்ளும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. இந்த ஆண்டு மார்ச் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அவசியம் இல்லாமல் கூடுதல் தண்ணீரை வாங்குவது ஒரு பக்கம் இருக்க... 4.50 ரூபாயாக இருந்த விலையை 21 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது அரசின் உத்தரவு.
இந்த 21 ரூபாயில் 7.50 ரூபாயை மாநகராட்சி தர, மீதம் உள்ள 13.50 ரூபாயை தமிழக அரசு வழங்கும். யாரோ சிலர் நஷ்டம் அடையாமல் இருக்க, மக்கள் பணம் தாரை வார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல... நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் வாங்கிக்கொள்ள தமிழக அரசு உறுதி அளித்துள்ளதால், இனிவரும் காலங்களில் இந்தத் தண்ணீர் கொள்முதல் இன்னும் அதிகரிக்கும். அந்தச் சுமையை 'குடிநீர் வரி’யின் பெயரால் மக்களிடம்தான் வசூலித்தாக வேண்டும். ஏற்கெனவே சாயப் பட்டறைகளின் காரணமாக தங்கள் மண் வளத்தை இழந்து நோய்களை சுமந்து நிற்கும் மக்கள், இப்போது குடிநீர் வரியாக பெரும் தொகையைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதா இப்படிச் செய்கிறார். ஆனால், பாதிக்கப்படுவது மக்கள்தான்.
சாயப் பட்டறை உரிமையாளர்கள் தண்ணீர் வாங்குவதை நிறுத்திவிட்டனர் என்றால், என்ன செய்ய வேண்டும்? பவானியில் உறிஞ்சும் தண்ணீரை நிறுத்த வேண்டும். அல்லது, தேவைக்கேற்பக் குறைக்க வேண்டும். ஆனால் இவர்களோ, விலைமதிப்பு இல்லாத நிலத்தடி நீரை இடைவிடாமல் உறிஞ்சுவதுடன், அந்தச் சுமையை பொதுமக்களின் தலையில் சுமத்துகின்றனர். இயற்கை வளத்தை நாசமாக்கி, மக்கள் பணத்தைச் சூறையாடும் இந்த செயல் மன்னிக்க முடியாத கொடுங்குற்றம். இத்தனைக்கும் பிறகு, இப்போது திருப்பூரின் குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது குடிநீர் திட்டத்துக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பொறுப்பும், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. (திட்ட அறிக்கைத் தயார் செய்வதற்கான தொகை 1.60 கோடி ரூபாய்).
தண்ணீரைத் தனியார்மயமாக்குவதன் கோர முகம் இதுதான். லாப வெறி மட்டுமே அவர்களின் குறிக்கோள். இயற்கையை நாசமாக்குவது குறித்தோ, நீர்வளத்தை விஷமாக்குவது குறித்தோ, அவர்களுக்குக் கவலை இல்லை. டெல்லி மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக, 'சோனியா விஹார்’ என்ற திட்டம் தீட்டப்பட்டது. கங்கை நதியில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்து சுத்திகரித்து, மக்களுக்கு விநியோகிக்கிறது டெல்லி குடிநீர் வாரியம். நாள் ஒன்றுக்கு சுமார் 270 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் வாரியத்தால், மேற்கொண்டும் 63 கோடி லிட்டரை சுத்திகரிக்க முடியவில்லையாம். இதற்காக உலகத்தின் மிகப் பெரிய தண்ணீர் கம்பெனிகளில் ஒன்றான சூயஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஒன்டியோ டெக்ரிமெண்ட் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 200 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம், இலவச மின்சாரம், வரி கிடையாது என ஏகப்பட்ட சலுகைகள். அதுபோக, தண்ணீர் தேவை குறைந்தாலும்கூட, 63 கோடி லிட்டர் தண்ணீரை வாங்கியே ஆக வேண்டும். ஒருவேளை, கங்கையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், 63 கோடி லிட்டரை சுத்திகரிப்பதற்கு உண்டான கட்டணத்தைத் தந்துவிட வேண்டும். இது எல்லாவற்றையும் மீறி, ஒப்பந்தக் காலமான 10 ஆண்டுகளில் சூயஸ் நிறுவனம் லாபகரமாக இயங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். சுய சிந்தனை உள்ள யாராவது இந்த ஒப்பந்தத்தை ஏற்பார்களா? ஆனால், டெல்லி குடிநீர் வாரியம் ஏற்றுக்கொண்டது.
தண்ணீர் தனியார்மயத்தின் உச்சகட்ட கொடூ ரம்... 'ப்ரீபெய்டு தண்ணீர்’! உங்கள் செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்கிறீர்கள் அல்லவா? அதுபோல, தண்ணீருக்கும் ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இது கற்பனை இல்லை. உலகின் பல நாடுகளில் இப்படித்தான் கொள்ளை அடிக்கிறார்கள்...
கனடா போன்ற மேல் நாடுகளில் குடி நீர் விநியோகம், சுத்திகரிப்பு போன்றவற்றை அரசு நிறுவனங்களே செய்கின்றன. இந்தியாவில் மட்டும் ஏனிந்த குளறுபடிகள், நிர்வாகத் திறமை இல்லாததாலா? அல்லது தனியாருக்கு தாரை வார்த்து கமிசன் அடிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின், அதிகாரியவாதிகளின் குறுக்கு வழியா?
ReplyDelete